நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்போம் என காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழக ஆளுநர் குறித்து ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களின் செயல்பாடுகளைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதைவிட நாகரீகமாக அதே நேரத்தில் அழுத்தமாகவும் கடிதத்தை எழுத முடியாது. அந்த அளவுக்கு முதல்வர் எழுதியிருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். அந்தக் கடிதத்தில் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இதற்கு மேல் ஒரு மாநில அரசு தனது கருத்தை சொல்லுதல் இயலாது.
ஆளுநரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. மரபுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவருக்கு என்று தனிப்பட்ட அதிகாரங்கள் எதுவும் கிடையாது. ஆளுநர் என்பவர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான்; முக்கியமான பயிர் கிடையாது. இது ஆளுநருக்கு புரியவில்லை. எனவே சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவும் செய்ய முடியாத தனக்கென்று ஒரு வரம்பு இல்லாமல் செயல்படுகிற ஒரு ஆளுநர் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து கீழே விழுவது பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
இதுவரை அவர் மூன்று நடவடிக்கை எடுத்தார். மூன்றுமே அவர் பின்வாங்கியுள்ளார். அல்லது செயல்பட முடியாமல் போனார். இது ஆளுநர் மாளிகைக்கு அழகு அல்ல. ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து. தமிழக முதலமைச்சரும் அதைத்தான் மையமாக சொல்லி இருக்கிறார். அவர்கள் அவ்வாறு ஆளுநரை திரும்பப் பெறவில்லை என்று சொன்னால், ஆளுநர் எதிலும் பங்கெடுக்க முடியாத ஒரு அரசாக இது போய்விடும். இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. அவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுவார் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைக்கு இந்தியாவின் நட்சத்திரமாக திகழக் கூடியவர் நம்முடைய முதலமைச்சர். எனவே மோடி அரசாங்கம் அவரைக் குறி வைக்கிறார்கள். அவருக்கு சிரமத்தைக் கொடுக்கிறார்கள். இதனுடைய விளைவு என்னவாகும் என்று சொன்னால் அவர் மிகப்பெரிய கதாநாயகனாக மாறுவார். இவர்கள் சிரமம் கொடுக்க கொடுக்க அவரின் ஆட்சி வலுவடையும் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெறக்கூடிய சூழல் வரும். இதனை ஆளுநரும் பாரதிய ஜனதாவும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வெற்றி பெற இயலாது தோல்விதான் அடைவார்கள்.
வாக்குச் சாவடியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. இது மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. மாநில கட்சிகளை அழிக்க பாஜக திட்டமிட்டு வருவது உண்மைதான். ஷிண்டேவை ஆட்டுக்குட்டியாக மாற்றினார்கள். விரைவில் அவர் கறி சமைக்கப்படுவார். எண்ணிக்கை பேட்டியில் வேண்டுமானால் அஜித் பவாரும், சிந்துவும் வெற்றி பெறலாம். மக்களிடம் வாக்கு எனப் போகிற போது சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் தான் வெற்றி பெறுவார்கள். செந்தில் பாலாஜியை அசைக்க கூட முடியாது. விசாரணை நடக்கிறது என்பதற்காக குற்றவாளி அல்ல, குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்கள் அவ்வளவு தான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்போம். போட்டியிடுவோம்” என்றார்.