அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்து கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் ''எங்களுடைய தலைவர்கள் அவர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்குமே அவர்களுக்கு என்று தனியாக ஒரு செயல் திட்டம் இருக்கிறது. அவர்களுக்கென்று தனியாக ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அவர்களுக்கென்று அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் இடையேயான பரஸ்பரம் தான் கூட்டணி. கூட்டணி என்பது தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான். எந்தெந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டும்'' என பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.
நேற்று ஆந்திராவில் கோவில் ஒன்றுக்கு வழிபாடு செய்யச் சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காப்பதற்கு தோள் கொடுப்போம். தமிழ்நாட்டு மக்களின் நலனை காப்பதற்கு தோள் கொடுப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நிதிகளை பெறுவதற்கு தோள் கொடுப்போம். பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வு. அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுள்ளார். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கூறுவது நடக்காது. அதிமுக மீதான அச்சத்தில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக சிலர் கூறுகின்றனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல வரும் 2026-ல் நடைபெற இருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் உறுதியாக கூட்டணி இருக்காது என்பதை நான் அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை'' என்றார்.