ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் இபிஎஸ் தரப்பிற்கு முன்பே வேட்பாளரை அறிவித்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. தொடர்ந்து, இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்காக அன்று கட்சியின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அறிவித்தார்.
ஆனால், செந்தில் முருகன் தனது மனுவை வாபஸ் பெறுவதற்கு முன்பே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்த போதும், வேட்பாளரை வாபஸ் பெறுவதாக சொன்ன பின் ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது ஆதர்வாளர்களில் ஒருவராக தன்னை ஆக்கிக் கொண்டனர். மறுமுனையில் ஓபிஎஸ் தரப்போ வாபஸ் பெற்ற வேட்பாளர் செந்தில் முருகனுக்கு கட்சியில் அமைப்புச் செயலாளராக பதவியும் வழங்கி இருந்தது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கில் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் இன்று அறிவித்தார். இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், அமைப்புச் செயலாளர் செந்தில் முருகன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த செந்தில் முருகன் இபிஎஸ் தலைமையில் கட்சியில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.