Skip to main content

அனைத்து தொகுதிகளிலும் போட்டி - விஜயகாந்த்

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
Vijayakanth


    
2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். 

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2005-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

 

 

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட கேப்டன் இலவச கணினி பயிற்சி மையமும், ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 1300 தையல் எந்திரங்கள்.

 

Vijayakanth

ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவி களும், சலவைத் தொழி லாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கி வருகிறோம்.

இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பல்வேறு உயர்பதவிகளில் பலரும் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன், தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள சுமார் ஆயிரம் (1000) நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் (10,000) வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய், செம்மரக்கட்டை வெட்டியதாக ஆந்திரா வன பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லபட்டனர்.

அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை “மக்களுக்காக மக்கள் பணி” என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம்.

 

 

கடந்த வருடம் 234 தொகுதிகளிலும் 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள,2,50,000 மரக்கன்றுகள் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நலிவுற்ற ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வழங்கம் போல் இந்த ஆண்டும் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில மக்களுக்கு தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் (1 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள்) வழங்கப்படும்.

 

Vijayakanth

மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கியதைப்போல் இந்த ஆண்டும் வழங்கப்படும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் தே.மு.தி.க.வின் அமைப்பு ரீதியான 64 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லா துறைகளிலும் தலையீடு இருக்கக்கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்து கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தே.மு.தி.க. தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நான் உறுதிபூண்டுள்ளேன்.

என்னைப் போல் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எனது பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம் பிடித்துள்ளோம்.

 

 

அதற்காக தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

நான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது எனக்காக உடல் நலம் வேண்டி சாதி, மதம் பார்க்காமல் ஆலயங்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் பிரார்த்தனை செய்த “என் உயிரிலும் மேலான எனது அன்பு தொண்டர்களுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும்” மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்