இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம், ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த குடியரசுத் தலைவராக யார் என நாம் விசாரித்தபோது, கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து பேசினார். அப்போது, மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை என்று மோடி அவரிடமே விவரித்திருக்கிறார். அடுத்த குடியரசு தலைவராகும் முயற்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு இறங்கியிருந்தார். அவருக்கும் வாய்ப்பு இல்லை என்று பா.ஜ.க. தரப்பு சொல்லிவிட்டது.
இதுகுறித்து டெல்லித் தரப்பிலேயே விசாரித்தபோது, இந்த முறை பழங்குடியினர் சமூகத்தில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக உட்காரவைக்க நினைக்கிறார் மோடி என ஒரு தரப்பினர் சொல்கின்றனர். குறிப்பாக அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரமுகரையும், 2 ஆண் பிரமுகர்களையும் பரிசீலனைப் பட்டியலில் அவர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களில் ஒருவர் குஜராத்காரர் என்றும், இன்னொருவர் ஜார்கண்ட் என்றும், மற்றும் ஒருவர் சட்டீஸ்கர் என்றும் சொல்கிறார்கள். இந்த மூவரில் ஒருவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் சொல்லப்படுகிறது. இந்த மூவரிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என அந்தத் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
அதேசமயம் மற்றொரு தரப்பு இதுகுறித்து பேசும்போது, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரையே ஜனாதிபதியாக உட்காரவைத்து, தன்னை மதத்துவேசம் இல்லாத ஆளாகக் காட்டிக்கொள்ள மோடி திட்டமிடுகிறார் என்றும், அதனால் கேரள கவர்னராக இருக்கும் ஆரிஃப் முகமதுகானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்கின்றனர்.