Skip to main content

இலக்கை நோக்கி அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம்: விஜயகாந்த் சூளுரை

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம் என்று தேமுதிக தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
 

அதில், ''2000 ஆம் ஆண்டு நம் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று 12–02-2000 ஆம் ஆண்டு சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்ற மூவர்ணத்துடன் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியினை அறிமுகப்படுத்தினோம்.

dmdk




கொடியின் வர்ணங்களுக்கான விளக்கம்: 
 

சிவப்பு நிறம்:
•    ஜாதி, மதம், மொழி என நாம் வேறுபட்டாலும், நம் அனைவரின் ரத்தமும் சிவப்பு நிறத்தால் ஒன்றானது என்ற உணர்வால் ஒன்றுபடவேண்டும்.

மஞ்சள் நிறம்:
•    செல்வமும், வளமும் அனைவருக்கும் சமமாக கிடைத்து, ஒவ்வொருவரின் வாழ்வாதாரமும் சிறப்பாக அமையவேண்டும். 

கருப்பு நிறம்:
•    நமக்குள் மூடநம்பிக்கை, கெட்ட எண்ணங்கள், வறுமை, நோய், தீவிரவாதம் போன்ற எதிர்மறை நிலையில்லாமல், நம் நாடு சிறக்க வேண்டும்.

நீலநிற ஜோதி:
•    அனைவரின் வாழ்விலும் பிரகாசமான ஒளி பரவி நாட்டுக்கும், வீட்டிற்கும், நல்லது நடக்க வேண்டும்.

 

2000 ஆம் ஆண்டு நம் கொடி அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்டொளி வீசி பறக்கச் செய்து, இதுவரை எந்த கழகமும் கண்டிராத இமாலய வெற்றிக்கு இணையாக, குறுகிய காலத்தில் நம் கொடி அனைத்து கிராமங்களிலும் ஏற்ற செய்த பெருமை நம் தொண்டர்களையே சேரும்.


2005 ஆம் ஆண்டு நமது ரசிகர் மன்றம், தேசிய முற்போக்கு திராவிட கழகமாக மாறிய போதும், ரசிகர் மன்றக் கொடியை கழக கொடியாக மாற்றி, நம் கொடிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற “சாதனை” படைத்த என் உயிரிலும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் சந்தித்த போதும், எதற்கும் மனம் தளராத என் படை தளபதிகளாக இருப்பவர்களே என்னுடன் உறுதுணையாக, நம்பிக்கையாக, பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களால் தான் என்றுமே நமது கழகம் வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் லஞ்சம், ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் நம் தமிழகத்தை உருவாக்க வீறுநடை போடுவோம். எந்த நோக்கத்திற்காக நம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோ, நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம் என்று இந்த நல்ல நாளில் (கொடி நாள்) சூளுரை ஏற்போம். 
 

 

“இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே”, 
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”
“நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசு” என்று முழங்க 
அனைவரும் உழைப்போம், வெற்றிபெறுவோம்.'' 
 

இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்