இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டுமளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரும்பாடாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் 3 கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த மாநில காங்கிரஸ் தலைமைக்கு சோனியாகாந்தி உத்தரவிட்டிருந்தார். அந்த போராட்டங்களை நடத்துவது குறித்து இன்று (02/07/2021) கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சைக்கிள் பேரணி, மாட்டுவண்டி பேரணி, பெட்ரோல் பங்க்குகளை முற்றுகை, மகளிர் அணியினரை முன்னிறுத்தி கையெழுத்து பெறும் போராட்டம் என பல்வேறு வகையிலான போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், 3 கட்டமாக நடத்தப்பட வேண்டிய ஆர்ப்பாட்டத்தை 2 கட்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக, சைக்கிள் பேரணி மூலம் கண்டன போராட்டம் நடத்துவது என்றும், மகளிர் அணியினரை மின்னிறுத்தி பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் பொது மக்களிடம் எரிபொருள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அவர்களிடம் கையெழுத்து பெறுவது என்றும், இந்த ஆர்ப்பாட்டங்களை ஜூலை மாதம் 7- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரைக்குள் நடத்துவது என்றும் முடிவு செய்து தீர்மானித்தனர். அதன்படி பிரதமர் மோடி அரசைக் கண்டித்து இந்த இரண்டு கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது தமிழக காங்கிரஸ்!