Skip to main content

மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது; வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் - எச்சரிக்கும் அன்புமணி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்.எல்.சியின் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசை காட்டியிருக்கிறது. நிலம் கொடுத்தவர்களுக்குக் கடந்த 50 ஆண்டுகளாக  ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்குக் கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ, மாத வாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு, சுரண்டப்பட்ட மக்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டிருப்பதும்,  என்.எல்.சிக்கு ஆதரவாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஆசை காட்டி ஏமாற்ற மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் தலைமையில் களமிறங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. மக்களை ஏமாற்றும் இம்முயற்சி பயனளிக்காது.

 

என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும்தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

 

அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க முன்வராத என்.எல்.சி நிறுவனம், இப்போது அந்நிறுவனம் வெளியேற வலியுறுத்தி எனது தலைமையில் பா.ம.க. இருமுறை போராட்டம் நடத்திய பிறகும், நிலங்களை வழங்க முடியாது என்று கூறி அளவிட வரும் அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய பிறகும் தான் என்.எல்.சி இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறது. இதிலிருந்தே என்.எல்.சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் என்ன? என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

 

இப்போதும் கூட நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 23,000-க்கும் கூடுதலான குடும்பங்களில் வெறும்  1000 பேருக்கு மட்டுமே வேலை வழங்க என்.எல்.சி முன்வந்திருக்கிறது. அதுவும் எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலைதான். அவ்வாறு தரப்படும் வேலை அடுத்த 99 நாட்களில் கூட பறிக்கப்படக் கூடும். 50 ஆண்டுகளாகத் தங்களை சுரண்டிய என்.எல்.சி. இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதைப் போல நாடகமாடுவதை மக்கள் நம்பமாட்டார்கள்; அவர்கள் என்.எல்.சி மீது நம்பிக்கையிழந்து விட்டனர்.

 

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில்தான் அனைத்துப் பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள் தான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இப்போது என்.எல்.சிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களின் முயற்சிகள் பலிக்காது.

 

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அதற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் தான். அதிலும் குறிப்பாக நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்குக் கூடுதல் கேட்டை விளைவிக்கும். புவிவெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்த படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வல்லுநர்கள்  வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும்.

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து  பாலைவனமாக்கி வருகிறது. என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுகள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாகக் கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை  சிக்கல்களுக்கும் தீர்வு. அதன் மூலம் தான் கடலூர் மாவட்டத்தைச் சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

 

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதைப் பாட்டாளி மக்கள் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்.எல்.சியை வெளியேற்ற வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.