ஓபிஎஸ் பக்கம் நிற்பதற்கு காரணம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் மிக உற்சாகமாகக் கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு இ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதில், “பெரும்பான்மையை சிறுபான்மை வென்றுவிடும். எப்பொழுதென்றால், சிறுபான்மை எப்பொழுது தர்மத்தின் பக்கம் நிற்கிறதோ, அப்போதெல்லாம் பெரும்பான்மையை வென்றுவிடும். மகாபாரதத்தில் மட்டுமல்ல, ராமாயணத்திலும் ராவணன் என்ற பெரும்பான்மையை எதிர்த்து ராமன், லட்சுமணன் என்ற இருவர் ராவணவதத்தை நடத்திக் காட்டினார்கள். சிலப்பதிகாரத்திலும் அரசன் பாண்டியன் முன்பு கணவனை இழந்த கண்ணகி ஒரே ஒரு சிலம்பை மட்டும் கையில் ஏந்திக்கொண்டு வழக்காடினார். அரசனைப் பார்த்து கேள்வியெழுப்பி நீதியை நிலைநாட்டினார்.
எப்பொழுதெல்லாம் சிறுபான்மையாக இருக்கக் கூடியவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஓடவிட்டதைத் தான் நமக்கு ஏற்கனவே சொல்லியுள்ளார்கள். நாம் தர்மத்தின் பக்கம் நிற்கின்றோம். அதற்கு காரணம் தர்மம் தலைகாக்கும் என்பதுதான்.
எம்.ஜி.ஆரின் பணி தொடர வேண்டும் என்பதற்காகத் தான் நாம் இன்று ஓபிஎஸ்-ன் பக்கம் இருக்கின்றோம். எம்.ஜி.ஆர் கையொப்பம் இடும்போதெல்லாம் உழைப்போரே உயர்ந்தவர் என்று தான் குறிப்பிடுவார். உடல் கவலைக்கிடமான நிலையில் இருந்த போதும் கூட அவரிடம் கையெழுத்து வாங்க வருபவர்களுக்கு உழைப்போரே உயர்ந்தவர் என்று எழுதித் தான், கீழே எம்.ஜி.ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போடுவார். அதற்குக் காரணம் அவர் ஏற்றுக்கொண்ட தொண்டு” எனக் கூறினார்.