எடப்பாடி பழனிசாமியின் திறமையைப் பார்த்து கூட தமிழன் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா சொல்லி இருக்கலாம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்கு உள்ளதோ அந்த கட்சி தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். இதுதான் நிதர்சனமான உண்மை ஆகும். அதேபோல் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும். அண்ணாமலை சொல்கிறார் பாஜக தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்று. எடப்பாடி பழனிசாமி கூடத்தான் அதிமுக 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சொன்னார். அதிமுக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். இதனை ஏற்றுக்கொண்டு வரும் கட்சிகளை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு ஒத்து வராத கட்சிகள் பற்றி கவலை இல்லை. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. வில்லாதி வில்லனப்பா, வல்லவனுக்கு வல்லவன் எடப்பாடி பழனிசாமி.
ஒரு தமிழன் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா சொல்கிறார். இதனை எடப்பாடி பழனிசாமியின் திறமையை பார்த்து கூட சொல்லி இருக்கலாம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி ஏன் வரக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா மோடியா லேடியா என்று சொன்னபோது ஜெயலலிதாவிற்குத்தான் வாக்களித்தார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற செல்வாக்கிற்கு மக்கள் அவருக்கே வாக்களிக்கலாம்.
ஒரு கட்சியை வளர்க்க அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள் பல கருத்துகளை சொல்வார்கள். அதனை எல்லாம் அளவுகோலாக இப்போதே எடுத்துக்கொள்ளக் கூடாது. கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இன்னைக்கு இருக்கிற கூட்டணி நாளைக்கு இருக்குமான்னு சொல்ல முடியாது. ஆளுநர் சொல்லுகிற கருத்துகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள அவரின் கட்சியாகவும், பிரதிநிதியாகவும் அதிமுக இல்லை. எங்களுக்கு என்று கொள்கையும், கோட்பாடும் உள்ளது. ஆளுநரை விமர்சிக்கவும் நாங்கள் தயாராக இல்லை. ஆளுநரை வாழ்த்தவும் இல்லை. விமர்சிக்கவும் மாட்டோம்” எனத் தெரிவித்தார்.