ஓ.பி.எஸ். சசிகலா அரசியல் சடுகுடு குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வபொழுது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனால், அவர்கள் அதிமுகவில் இணைந்து செயல்படுவார்களா என்பது குறித்து இருவரும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதேவேளையில், அவர்கள் பொதுவெளியில் பேசுவதும், அவர்களின் ஆதரவாளர்களுடன் அவர்கள் நடத்தும் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளும் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களோ என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் கூட தேனியில் ஓ.பி.எஸ்., அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், சசிகலாவை மீண்டும் அதிமுக இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து பேசியது, அதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது என பரபரப்பாக அதிமுகவின் அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது.
பல மாதங்களாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்தான விசாரணை கமிஷனில் ஆஜராகமால் இருந்த ஓ.பி.எஸ். கடந்த மாதம் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " அவர் (சசிகலா) மீது எந்தக் காலத்திலும் எனக்கு சந்தேகமில்லை. சின்னம்மா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை உள்ளது’ என்று தெரிவித்தார். இது மேலும், அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓ.பி.எஸின் இந்த கருத்துக்கு பதில் அளித்த சசிகலா, "அவர் உண்மை சொல்லியுள்ளார்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கில் நீதிமன்றம், 'அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்துவெளியே வந்த ஓ.பி.எஸ்-ஸிடம் இந்த வழக்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.