காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கான பொறுப்புக்கு விண்ணப்பம் செய்வதற்கு அறிவிப்புக்கு வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பைத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை கடந்த 3ஆம் தேதி அறிவித்திருந்தார். அதில் வருகிற 18ஆம் தேதி வரை மாவட்ட தலைவர்கள் மாநில செயலாளர்கள், துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான நடைமுறைக்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் 72 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம கிராம ஊராட்சி ஒருங்கிணைக்கக் கூடிய நடவடிக்கையை மாநிலத் தலைமை அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆன்லைன் மூலமாக நேற்று கூட்டம் நடந்துள்ளது. இதில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாவட்ட தலைவர் பதவிக்கான விண்ணப்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.