Skip to main content

''கமலிடம் இருந்து நல்ல முடிவு வரும்''-சந்திப்புக்கு பிறகு சரத்குமார் பேட்டி

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Sarathkumar to join hands with Kamal?

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

 

தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில்,  ஐ.ஜே.கே. (இந்திய ஜனநாயகக் கட்சி) -வின் தலைவர் ரவி பச்சமுத்து   மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

 

இதுகுறித்து, சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், தமிழகத்தை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்காகவும் இந்தக் கூட்டணி, மாற்றத்திற்கான முதன்மை அணியாகச் செயல்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தற்பொழுது சமக தலைவர் சரத்குமார் மற்றும் ஐ.ஜே.கேவை சேர்ந்த நிர்வாகி ரவிபாபு ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தனர். நேற்று மூன்றாவது அணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் வரும் தேர்தலில்  ஐ.ஜே.கே-சமக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்தையும் கூட்டணிக்கு இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Sarathkumar to join hands with Kamal?

 

இந்த சந்திப்பிற்கு பிறகு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ''நல்ல எண்ணங்களை கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்தோம். ஆனால் இந்த தேர்தலுக்காக எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் அதிமுக நடத்தப்படாமல் இருந்தது. தொடர்ந்து பயணித்த எங்களை அழைத்து பேசியிருக்கலாம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இந்த கூட்டணி இறுதி செய்யப்பட்டால் முதலில் வெற்றிபெறுவதற்கான வேலைகளை செய்வோம். முதல்வர் பதவி குறித்தெல்லாம் பின்னர் முடிவு செய்யப்படும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் நடிகர் சரத்குமார் தரிசனம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  உள்ளது. இங்கு தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்தின் மலர்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால நூல்கள் சிறப்பாக தெரிவிக்கின்றன. இது சித்திரை மாதம் மட்டுமே மலரும் தன்மையுடையது. இந்த மரத்தின் அருகில் புராண காலத்தில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்கு காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசாட்சியை வழங்கியதாக இத்திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அதனால் இங்கு வந்து வணங்குவோருக்கு உயர்ந்த பதவிகள், வளமான செல்வங்கள், சொந்த வீடு ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த திருக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்து வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டு புகழடைகின்றனர். அந்த வகையில், நேற்று (28-04-24) ஞாயிறு விடுமுறை நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே திருக்கோயிலுக்கு வந்து வரிசையில் நின்றனர். காலை 6 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பலவித மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

உற்சவர் முருகப்பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனிடையே, காலையில் நடிகர் சரத்குமார் வருகைதந்து முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தரிசித்தார். பின்னர், ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், வஸ்திரம், மாலைகள், முருகன் படம் ஆகியன வழங்கப்பட்டன.

Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

விடுமுறை நாளையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியவற்றை இணை ஆணையர இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் அறிவுரையின் பேரில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் வழங்கினார்.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.