
புதுக்கோட்டையில் பொன்னமராவதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாக பேருந்துக்குள் இருந்த பயணிகள் குற்றம் சாட்டிய நிலையில் பேருந்து நிற்காமல் தான் செல்லும் என அரசு பேருந்து ஓட்டுநர் பதிலளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் பணிமனைக்கு சொந்தமான 13 என்ற எண் கொண்ட பேருந்து புதுக்கோட்டை பொன்னமராவதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிலர் பொன்னமராவதி பஸ் ஸ்டாப்பில் பேருந்தை நிறுத்த முடியுமா முடியாதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக்கொண்டே பேசுகையில் 'முடியாது' என பதிலளித்ததோடு ''எங்களை வீடியோ எடுத்து என்ன பண்ண போறீங்க. போய் மேனேஜர் கிட்ட கேளுங்க'' என பதிலளித்தார்.
மேலும் ''வீடியோவை நீங்க பேஸ்புக்கில் போட்டாலும் சரி; எதுல போட்டாலும் சரி; யார் கிட்ட வேணாலும் போடுங்க'' என்றார். ஆனால் உள்ளிருந்த பயணிகள் 'நிறையப் பேர் நின்று கொண்டிருக்கிறோம் கதவைத் திறங்கள் இறங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்த நிலையில் அலட்சியமாக ஓட்டுநர் 'முடியாது' என பதிலளித்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.