
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03-05-25) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், கட்சி ரீதியான மாவட்டங்களைப் பிரிப்பது, நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலை செய்து அ.தி.மு.கவை பா.ஜ.க அடக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வந்துவிடும் என்று பயப்படுகிறார். அதனால் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளார். அமைச்சர்கள் சென்னையில் இருப்பதை விட அவர்களது மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று வார்டு வார்டாகச் சென்று மக்கள் குறைகளைக் கேட்க வேண்டும்'' என வலியுறுத்திப் பேசியிருந்தார்.
இன்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் பொதுக்குழு நடைபெறும் இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் இருந்தது. இந்நிலையில் திமுக வரலாற்றில் முதல் முறையாக சென்னைக்கு வெளியே திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.