வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 33 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை நடந்த தேர்தலை விட 4 இடங்கள் குறைவாகும். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிபுரா பூர்வக்குடிகள் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டும் வென்றுள்ளது.
கூட்டணியுடன் போட்டியிட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மேகாலயாவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா சட்டமன்ற தேர்தலில் 59 தொகுதிக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்னும் நிலையில் எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறாமல் உள்ளதால் மேகாலயாவில் ஆட்சி அமைக்க சிக்கல் எழுந்துள்ளது.
நாகாலாந்தில் சட்டபேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.