
தேமுதிகவின் நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தேமுதிகவின் 19வது பொதுக்குழு மற்றும் தலைமைச் செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான முடிவுகள் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. குறிப்பாக விஜய பிரபாகரன் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பொறுப்பில் இருந்த எழும்பூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, தனக்கு மாநிலத் துணை செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால், நல்லதம்பிக்கு தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த நல்லதம்பி, தனக்கு வழங்கப்பட்ட பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘நான் என்றென்றும் அன்புத் தலைவர் விஜயகாந்துக்காகவும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தேமுதிகவிற்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மன்றத்திலும் கழகத்திலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் விஜயகாந்த் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன். மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த விஜயகாந்தின் மறு உருவமும் விஜயகாந்தின் நிழலாகவும் இருக்கின்ற விஜய பிரபாகரனுக்கு கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் விஜயகாந்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.
எனவே எங்களின் காவல் தெய்வம் பிரேமலதாவின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்திலிருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கழகத்தின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு கழகத்தின் பொதுச் செயலாளருக்கும் கழக பொருளாளர் எல்.கே. சுதீஷுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே கழக பொதுச் செயலாளர், கடந்த 30.04.2025 அன்று வெளியிட்ட கழக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.