
சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்தில் பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து வெயில் காலத்தில் பல்வேறு நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கத்தின் தலைவர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார்.
இதில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஒற்றுமையாக இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார். இதனைத் தொடர்ந்து சிதம்பர நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், வர்த்தகர் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், முஸ்தபா பள்ளி தாளாளர் அன்வர் அலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பிரவீன் குமார், மகப்பேறு மருத்துவர் அங்கீதா சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக மருத்துவ முகாமை நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இந்த மருத்துவ முகாமில் ராஜீவ் காந்தி மருத்துவமனை 40 மருத்துவர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் மருத்துவம், இதய மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை, பிசியோதெரபி, எலும்பு முறிவு மற்றும் தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மருத்துவ முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வயதானவர்கள், பெண்கள் என கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் தமிழ்முன்அன்சாரி, மணிவண்ணன், ரியாஸ், நவாஸ், பிரசாந்த், ஷேக் மீரான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு முகாமிற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட பயனாளிகள் கண் அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு இலவசமாக அனுப்பி வைத்தனர். மருத்துவமுகாமை நடத்திய ஆட்டோ ஓட்டநர்களுக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.