
கோடை காலம் தொடங்கி தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக சில இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தென்காசியில் நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி இருந்தது. கடந்த மே ஒன்று அன்று தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பொழிந்தது. வேலூரிலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்தது.
இந்நிலையில் மே ஐந்தாம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கோடை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மே ஐந்தாம் தேதி தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நெல்லை, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் மே ஐந்தாம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.