Skip to main content

“மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி” - மு.க.ஸ்டாலின் பேச்சு 

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (22-02-2019) சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு சுதர்சனம் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு திருமண விழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

 
நம்முடைய மாதவரம் சுதர்சனம் அவர்களைப் பற்றி எல்லோரும் இங்குச் சிறப்பாக பேசினார்கள். அதிலும், குறிப்பாக நம்முடைய கழகத்தினுடைய பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகின்ற போது அவர் என்ன தொழில் செய்து கொண்டிருக்கின்றார். அந்தத் தொழில் மாங்காய் பிசினஸ். எந்தளவிற்கு அதில் அக்கறை எடுத்துக்கொண்டு அதில் முன்னேற்றம் கண்டு அதன் மூலமாக வரும் வருவாயைக் கூட இந்த இயக்கத்திற்கும், இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கின்றார். ஆகவே, மாம்பழத்தில் அவருக்கு இப்படி ஒரு வருமானம்.


 

Speech



ஆனால், இன்னொருபுறம் மாம்பழத்தை வைத்துக்கொண்டு எப்பேற்பட்ட வருமானங்கள் எல்லாம் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு, இரு வீட்டார், மணமகனை பெற்றெடுத்து இருக்கக்கூடியவர்கள், மணமகளை பெற்றெடுத்து இருக்கக்கூடியவர்கள், அந்த இரண்டு குடும்பமும் இப்போது கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.


இந்தக் கூட்டணி சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால், எந்த அச்சுறுத்தலுக்கும், எந்த மிரட்டலுக்கும் அவர்கள் ஆட்படக்கூடாது. எந்த ஆசைக்கும் ஆட்படக்கூடாது. ஆனால், நாட்டிலே, இன்றைக்கு சில கூட்டணிக் கட்சிகளைப் பார்க்கின்ற போது, எப்படிப்பட்ட ஆசைகளுக்கு, எப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு எப்படிப்பட்ட நிலைமைகளுக்கு எல்லாம் ஆளாகியிருக்கின்றார்கள், என்பதையெல்லாம் நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட தலைவர் அவர்கள், ஒரு கட்சியினுடைய நிறுவனத் தலைவர் அவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகாலமாக கொள்கை ரீதியாக சொல்லி வந்தது, ‘திராவிட இயக்கத்தோடு என்றைக்கும் நாங்கள் கூட்டு வைக்க மாட்டோம். திராவிட சமுதாய உணர்வோடு இருக்கக்கூடியவர்கள் மீது என்றைக்கும் நாங்கள் கூட்டு வைக்க மாட்டோம்’ நல்ல வேளை நம்மிடத்தில் அவர்கள் கூட்டு வைக்கவில்லை.
 

ஆனால், அ.தி.மு.க வோடு அவர்கள் கூட்டணி வைத்திருக்கின்ற காரணத்தால் அ.தி.மு.க இன்றைக்கு திராவிட இயக்கம் இல்லை என்பதை நாட்டிற்கு வெளிப்படையாக சொல்லியிருக்கின்றார்கள். அதுதான் உண்மையான நிலை, அதுதான் நமக்கும் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதே 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது அந்தக் கட்சி கொள்கை ரீதியாக மூன்று முழக்கத்தை தெரிவித்தார்கள். முக்கியமான முழக்கம் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தீர்கள் என்றால் தொடர்ந்து அந்த விளம்பரம் தான் வந்தது.
 

என்ன விளம்பரம் என்றால், வெளிநாட்டில் ஒரு தலைவர் வெளியிட்ட விளம்பரத்தை காப்பியடித்து போட்டார்கள். “மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி” என்று மூன்று வாசகம் போட்டார்கள். அது அப்பொழுது, இப்பொழுது இந்தத் தேர்தலில் மாற்றிப்போட வேண்டும். எப்படி என்றால் “மாற்றம் – ஏமாற்றம் – அன்புமணி அல்ல, நன்றாக கவனியுங்கள், “மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி” இப்படிப் போட வேண்டிய ஒரு நிலை இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றது. நான் யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை, மிகவும் மரியாதையோடு தான் பேசுகின்றேன்.
 

ஐயா, சின்ன ஐயா என்று தான் நான் பார்க்கும் இடங்களில் பேசிவருகின்றேன். ஆனால், நாட்டின் நிலைமைகளை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் அவர்கள் என்ன சொன்னார்கள்? இதே முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பார்த்து, முதலமைச்சர் ஒருவர் இருக்கின்றார். துணை முதலமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவர்களுக்கெல்லாம் நிர்வாகம் தெரியுமா? மக்களைப் பற்றி கவலைப்படுவார்களா? கொள்ளையடிப்பதிலேயே, இலஞ்சம் வாங்குவதிலேயே கமிசன் வாங்குவதிலேயே, கரெப்சன் நடத்தியே அவர்கள் தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று பட்டவர்த்தனமாக பேசியிருக்கின்றார். இன்றைக்கு அவர்கள் கூட்டணி வைத்திருக்கின்றார்கள். இன்றைக்கு அதைப்பற்றியெல்லாம், நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாக ஒரு தேச துரோக கூட்டணியாக, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மக்கள் விரோத கூட்டணியாக அது இன்றைக்கு அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 



 

சார்ந்த செய்திகள்