அமைச்சர்கள் சிலர், தன்னை மதிக்கவில்லை என்ற எரிச்சலில் எடப்பாடி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி வசம் இருக்கும் சிறப்புத் திட்டங்களுக்கான செயலாக்கத் துறையைத் தானே கவனிக்கலாம் என்கிற எண்ணத்துக்கு வந்திருக்கார் எடப்பாடி. இதைப் பற்றி வேலுமணியிடம் பேசும் போது அவரோ, நான் நல்லாத்தானே கவனிக்கிறேன். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாம உங்க துறைகளை நீங்க கவனிங்கள் என்று சொல்லிட்டதாக கூறுகின்றனர். அதேபோல், கூட்டுறவுத் துறை பணியாளர் நியமனத்தில் ஏகத்துக்கும் குளறுபடி என்று எடப்பாடியிடம் புகார்கள் போயுள்ளதாக கூறுகின்றனர். உடனே துறை அமைச்சரான செல்லூர் ராஜுவிடம் இதுபற்றி அவர் கேட்டிருப்பதாக கூறுகின்றனர். அமைச்சரோ, என் துறையை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று பதில் சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் எடப்பாடியை எரிச்சலடைய வைத்துள்ளதாக சொல்கின்றனர். ஆளுங்கட்சிக்குக்குள் நடக்கும் எல்லா விவகாரங்களையும் கூர்ந்து பாஜக கவனித்து வருவதாக கூறுகின்றனர்.

எடப்பாடியோடு முரண்படும் அமைச்சர்களையும் காலம் வரும் போது ரஜினி பக்கம் தாவ வைத்து, அ.தி.மு.க.வின் பலத்தை எப்படியாவது குறைத்து விடலாம் என்று பாஜக கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தி.மு.க.விலும் சலசலப்பை ஏற்படுத்த என்ன வழி என்று பா.ஜ.க. நிறைய ஆலோசித்து வருவதாகவும் கூறுகின்றனர். 2 ஜி தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளைச் சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதை வைத்து, தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் ஆலோசனையும் டெல்லியில் நடந்திருப்பதாக கூறுகின்றனர்.