சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தச் சொல்லி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அன்புமணிக்கு பதிலடி கொடுத்திருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, தனது கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் அய்யா ராமதாஸும், அவரது தவப்புதல்வன் அன்புமணி ராமதாஸும் தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள். இதோ மறுபடியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை அரசியல் சூதில் பணயம் வைத்து, தனது அரசியல் பேரத்தை வலுப்படுத்த துடிக்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி என்றும் ஏமாறப்போவதில்லை என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் அவர்கள் முகத்தில் அடித்தாற்போல் தெரிவித்துவிட்டனர்.
எங்களது பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு, வன்னியர் சமூக மக்கள் மீது தங்களுக்கு பாசம் உள்ளது போல் அன்புமணி ராமதாஸ் நீலிக்கண்ணீர் வடித்து நடித்திருக்கிறார். கூட்டணி கட்சியிடம் பிளஸ் 1 என்ற ராஜ்யசபா சீட் ஒப்பந்தம் போட்டு அந்த சீட்டை அன்புமணிக்கு மட்டுமே தாரை வார்ப்பார்கள். ஒன்றிய அமைச்சர் பதவி என்றாலும் அதனையும் தன் மகன் அன்புமணிக்குத்தான் வாங்கிக் கொடுப்பாரா ராமதாஸ்? இதுதான் ராமதாஸின் வன்னியர் பாசமா? என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாமகவிற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி போன்ற எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸை அடுத்த தலைவராக்கியது எதனால்? தலைவர் பதவியில் இருந்த தீரன் எங்கே போனார்? ஜி.கே.மணி வகித்த தலைவர் பதவியை எதற்காக பிடுங்கி அன்புமணிக்கு கொடுத்தார்கள்? பாமகவில் வேறெவருமே அன்புமணி அளவிற்கு உழைக்கவில்லையா? என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாமகவிற்காக உழைத்து ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடு வெட்டி குருவைக் கூட இறுதிக் காலத்தில் கைவிட்ட உங்களுக்கு வன்னியர் பாசம் பற்றி எல்லாம் பேசத் தகுதி உண்டா? அவரது குடும்பத்தின் இன்றைய நிலை என்ன? வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்கத் தயார் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதற்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு அன்புமணி பேசுவாரா?
பொய்க்கால் குதிரை ஓட்டி நானும் வன்னிய மக்களை காக்கும் ராஜாதான் என வாய் வேடம் போட்டால் எத்தனை காலத்துக்குத்தான் வன்னிய மக்கள் நம்புவார்கள்? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவோடு தேர்தல் கூட்டுச் சேர அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலாமாக 10.5% இட ஒதுக்கீடு என்ற ஏமாற்று அறிவிப்பை அறிவித்தீர்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் அந்த அறிவிப்பு வெளியானது. அனைத்தும் அறிந்ததாய் சொல்லிக்கொள்ளும் ராமதாஸ் அவர்களுக்கு அப்போது தெரியாதா? அந்த இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்படும் என்று? தெரியும். தெரிந்தேதான் நம்பவைத்து ஏமாற்றினார் ராமதாஸ். தற்போதும் இட ஒதுக்கீட்டினையே அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசோடு அரசியல் ஆதாயத்திற்காக கைகோர்த்துக் கொண்டு நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தந்தையும் மகனும்.
சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்லாது வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பையே எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள பாஜகவை ஆதரித்து அவர்களோடு கூட்டணியில் இருக்கும் அன்புமணி, தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேசி வருவது அரசியல் ஆதாயத்திற்காக அன்றி வேறென்ன? மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசு மேற்கொள்வது. அதைத்தான் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாக நீதிமன்றங்களோ இன்னபிற ஒன்றிய அரசு அமைப்புகளோ அங்கீகரிக்கும், மாறாக மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது அது வெறுமனே கணக்கெடுப்பாக இருக்குமே தவிர அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் பீகாரில் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டினை, நீதிமன்றம் நிராகரித்துவிட்டதை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார்.
1989 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினை ஏற்படுத்தி, 115 மிகவும் பின்தங்கிய சமூக மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறி வாழ்வில் ஏற்றம் பெற காரணமாக இருந்தார். கலைஞர் அவசரகதியில் அரசியலுக்காக எதுவும் செய்யாமல் ஆழ்ந்து ஆலோசித்து உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மீது அக்கறை கொண்டு எந்த நீதிமன்றமும் நிராகரித்துவிடாதபடி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை செயல்படுத்திக் காட்டினார். தலைவர் கலைஞர் வழியில் பயணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற உடனே கடந்த 1987 அதிமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடியதற்காக சுட்டுக்கொல்லப்பட்ட இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படியே மணிமண்டபம் அமைக்கபட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
அன்புமணிக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏற்கனவே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிற்கு செல்லும் வன்னிய சமூக மாணவர்களின் எண்ணிக்கை 10.5% விட அதிகம். தற்போது 10.5% யை அமல்படுத்துவதன் மூலம் மேற்படிப்பில் சேரும் வன்னியர் சமூக மாணவர்கள் எண்ணிக்கையில் பின்னடைவை சந்திக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுசெய்யும் அரசல்ல இந்த திராவிட மாடல் அரசு. எதைச் செய்தாலும் அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணமும், அது யாராலும் நிராகரிக்க முடியாத வண்ணமும் அமைய வேண்டும் என்ற வகையில் கலைஞர் காட்டிய வழியில் சரியான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வரும் அரசாகவே இருக்கிறது. ஆனால் தற்போது பாமகவோ தங்கள் அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்து வருகிறது. நன்றாய் படித்து வேலைக்கு சென்று வாழ்வில் சிறந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்புள்ள இளைஞர்களை எல்லாம், பிஞ்சிலேயே சாதி வெறி பாய்ச்சி நன்றாய் செழித்து வளர வேண்டிய அந்த இளைஞர்களை வெறும் களைகளாய் மாற்றிக் கொண்டிருப்பதுதான் பாமகவின் சாதனை. மருத்துவராகவும், பொறியாளராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இன்னபிற அரசின் உயர் பதவிகளில் இடம்பெற வேண்டிய இளைஞர்களை உங்கள் அரசியல் நலனுக்காக தவறான வழியிலே வழிநடத்தி வரும் தங்களை இனியும் இச்சமூகத்து இளைஞர்கள் நம்பபோவதில்லை.
அன்புமணிக்கு உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவர் கை குலுக்கி உறவாடி கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசை பணிய வைத்து, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஆனால், அதற்கு தைரியம் வேண்டும். தைலாபுரம் பயிலரங்கத்தில் சொல்லித் தர மாட்டார்களா? மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்பீர்களா? அதை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்”என்கிறார்.