கோவை குறிச்சி பகுதியில் தமிழக பாஜக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ரபேல் வாட்சினை வைத்து 25 எம்.பி.க்களை வாங்கி விடலாம் எனத் தோன்றுகிறது. இந்த வாட்ச் விவகாரத்தை இணையத்தில் பேசுகிறார்கள். எப்பொழுது டீக்கடைகளில் இதைப் பற்றி மக்கள் பேசுகிறார்களோ அன்றைக்கு ரபேல் பில்லை வெளியிடுவேன். அன்றைக்கு தமிழகத்தில் அரசியல் புரட்சி நடந்துவிட்டது என அர்த்தம்.
நமது இணையதளம் மற்றும் செயலி உருவாக்கும் வேலையைக் கட்சியினர் துவங்கியுள்ளனர். இணையத்தில் வந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் வெளியிட்டு ஒரு நாளில் அரசியல் புரட்சியை நாம் ஏற்படுத்த போகிறோம். திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறோம். ஆனால், இரண்டு லட்சம் கோடி என்பது குறைவோ என எனக்குத் தோன்றுகிறது.
பொதுமக்களிடம் இருந்து செய்திகளை வாங்கி இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை எந்த பினாமி எங்கு சொத்துகளாக வைத்துள்ளார்கள் என ஏப்ரலில் பாதயாத்திரை ஆரம்பிக்கும் பொழுது அதை முழுமையாக வெளியிடுவோம். அது நிச்சயம் இரண்டு லட்சம் கோடியை தாண்டும்” எனக் கூறினார்.