இந்திய-சீன எல்லைப் பகுதியில் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவை கோபப்படுத்தும் அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது சீனா. இதனால், எல்லைப் பகுதிகளில் போர் பேகங்கள் சூழ்வதும், களைவதுமாக இருக்கின்றன.
கடந்த 2017-ல் இந்தியா-சீனா-பூடான் இடையே அமைந்துள்ள லோக்டாம் எல்லைப் பகுதியில் புதிய சாலைகளை அமைக்க முயற்சித்தது சீன ராணுவம். இதனால் இந்திய-சீன படைகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளில் சாலை பணிகளை நிறுத்தியது சீனா.
அதேபோல, கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா ஆக்ரமிக்க முயற்சிக்க, இரு நாடுகளின் வீரர்களுக்கிடையே தாக்குதல் நடந்தது. அதில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். இதனால் எல்லைப் பகுதியில் சூழ்ந்த போர் பதட்டம் தெற்காசிய பிராந்திய நாடுகள் அதிர்ச்சியடைந்தன. இந்திய-சீனா தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல்கள் தற்காலிகமாக நிருத்தப்பட்டிருந்தாலும் லடாக் பகுதியில் போர் பதட்டம் இப்போதும் குறையவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், சிக்கிம் பகுதியில் இந்தியாவை சீண்டும் நடவடிக்கைகளில் குதித்துள்ளது சீனா... அதாவது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் அருகே உள்ள தனது எல்லைப் பகுதிகளான டோகா லா மற்றும் நாது லா ஆகிய இடங்களில் பல்வேறு வகையிலான கட்டுமான பணிகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருகிறது. அந்த பணிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதனை இந்தியா, உற்று கவனித்து வருகிறது.
இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தை ஒட்டியுள்ள மற்றொரு பகுதியான டோக்லாம் என்கிற இடத்தில் ஏவுகணை ஏவு மையங்களை சீனா அமைத்து வருகிறது. இந்த மையத்தின் மூலம், விண்ணில் உள்ள ஒரு இலக்கை தரையில் இருந்தபடி அதிவேகத்தில் தாக்க முடியும். அதிக தொழில் நுட்பத்துடன் இந்த ஏவுகணை மையத்தை சீனா அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் தளங்களையும் சீனா அமைத்து வருகிறது. இதனை சாட்டிலைட் படங்கள் மூலம் கண்டறிந்துள்ளது இந்திய புலனாய்வு அமைப்புகள். இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் இந்தியாவை மிரட்டும் வகையில் அத்தனை ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது சீனா.