மத்திய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எடப்பாடி பழனிசாமிக்கு கடமை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமியின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது மத்திய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய (MGNREGS) நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி, தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?. எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு, மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?. தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.