மதகஜராஜா பட வெளியீட்டின் போது அதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் முகம் வீங்கியும் பேசும் போது கை நடுங்கியும் காணப்பட்டார். அதற்கான காரணம் வைரஸ் காய்ச்சல் என அந்நிகழ்ச்சியிலே தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் விஷால் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதை கலங்கடித்தது. அவர் சீக்கிரம் குணமடைய வேண்டி பலரும் பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே விஷால் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. பின்பு படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், “கடும் காய்ச்சலோடு தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால் விஷால் போதைக்கு அடிமையாகி விட்டார், நரம்புத் தளர்ச்சி என்பது போன்று பலர் தங்கள் கற்பனை உலகத்தில் பல செய்திகளை உருவாக்கி வெளியிட்டார்கள். நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொண்டு உண்மை என்ன என என்னிடமே கேட்டு அதை வெளியிடலாம்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஷால் உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி யூட்யூப் சேனல்கள் மீது நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நாசரின் புகாரின் அடிப்படையில் யூட்யூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.