தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான அவகாசம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன், "எம்எல்ஏ பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார்; அதேபோல் நானும் நடிப்பேன். நான் செலவழிக்கும் பணம் நானே சம்பாதித்தது என்பதால் படம் நடிப்பதில் என்ன தவறு? அரசியலுக்கு இடையூறு இருந்தால் சினிமாவில் ஓய்வு பெற்று விடுவேன். எல்லாவற்றுக்கும் தயாராகத் தான் அரசியலுக்கு வந்துள்ளேன்; எந்த மிரட்டலுக்கும் பயப்பட போவதில்லை. என் வீடு, என் இடம் எல்லாவற்றையும் கட்சிக்காகக் கொடுத்துவிட்டு விடுதியில் தங்கி உள்ளேன்" என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கமல்ஹாசனுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ராதிகா சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் உடனிருந்தனர்.