அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 06.12.2019 அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த ஆலோசனையில், தேர்தலை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப்போடுங்கள் எனவும், தேர்தலை உடனடியாக நடத்தலாம் எனவும் இரு வேறு குரல்கள் அங்கு எதிரொலித்திருக்கின்றன.
இதற்கு பதில் சொன்ன அதிமுக தலைவர்கள், தேர்தலை நடத்தாமல் இருக்க என்ன வழிகளோ அதைத்தான் சீரியஷாக கவனிக்கிறோம். ஆனா, அதற்கான வழிகள் இல்லை. வேண்டுமானால் தேர்தலை தள்ளிப்போடலாம். அப்படியே தள்ளிப்போட்டாலும் அதிகபட்சம் 2 மாதங்கள் தள்ளிப்போடலாம். பட்ஜெட்டுக்கு முன்னால் நாம் தேர்தலை நடத்தித்தான் ஆக வேண்டும். அதற்கு பதிலாக உடனடியாக தேர்தலை நடத்தினால் என்ன? என்பதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்ததும் முடிவெடுக்கலாம். எது எப்படி இருப்பினும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உள்ளாட்சி அமைப்புகளை உடைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடத்த முடிவு செய்தோம். ஆனா, இதை மாற்றியமைக்க வேண்டிய பிரச்சனை எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் இருக்கும் விதிகளின்படி தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து ஒரு முடிவெடுக்கப்பட்டதும் உங்களுக்கு சொல்கிறோம். அதனால், தேர்தல் நடைமுறைகள், திமுகவை வீழ்த்தும் வியூகம் அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருங்கள் என நிறைய யோசனைகளை சொல்லியுள்ளனர் அதிமுக தலைவர்கள்.
இதற்கிடையே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து விட்டு மறைமுக தேர்தலை நடத்த சமீபத்தில் கவர்னர் ஒப்புதலுடன் அரசாணை பிறப்பித்திருந்தனர். இதில் சில சட்டச்சிக்கல்கள் எழுந்திடிப்பதால் மறைமுக தேர்தல் குறித்த அரசாணையை திரும்பப் பெறலாமா ? என்பது குறித்தும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றியும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.