Skip to main content

நாளையுடன் முடியும் பிரச்சாரம்; கட்சிகளுக்கு மூன்று உத்தரவு

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Campaign ends tomorrow; Three orders to the parties

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து களத்தில் உள்ளது. ஒருபுறம் தேமுதிகவும் மறுபுறம் சுயேட்சை வேட்பாளர்களும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து நாளை வாக்கு சேகரிக்க உள்ளார். ஏற்கனவே திமுக சார்பில் திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை முடித்துவிட்ட நிலையில் நாளை முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

 

மேலும், நாளை மாலையுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைகிறது. இந்நிலையில் பிரச்சார நேரம் முடிவடைவது குறித்து ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் முடிவடைகிறது. முதலாவதாக, நாளை மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தற்காலிக தேர்தல் பணிமனைகளாக அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்து 107 தேர்தல் பணிமனைகளை ஒதுக்கியுள்ளோம். அதை அனைத்தையும் நாளை மாலை 5 மணிக்குள் அதை அப்புறப்படுத்த வேண்டும். அதை கடிதமாகவும் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளோம். மூன்றாவதாக, இந்த தொகுதிக்கு தொடர்பில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடனடியாக வெளியேற வேண்டும்.

 

தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. தொகுதியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் வரும் புகார்கள் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமலும், ஆதாரம் இல்லாமலும் இருப்பதனால் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்