நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் தேர்தல் பரப்புரை பணிகளில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் தனது முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதே சமயம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். என்னை பாஜகவிற்காக அர்ப்பணித்துள்ளேன்.
பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன். ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக மருத்துவரின் அறிவுரைப்படி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். முதுகு தண்டுவட எலும்பின் காயம் விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை” என குறிப்பிட்டுள்ளார். குஷ்பு நேற்று வடசென்னை பா.ஜ.க. வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.