
தேசிய தலைவர்கள் பலர் தமிழகத்துக்கு வர வாய்ப்பு உள்ளதால் மத்திய பாதுகாப்பு படையை அனுப்புவதாக உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக உள்துறை செயலருக்கு ஃபேக்ஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இந்த செய்தி திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவேரி மருத்துவமனை வெளியே திரண்டிருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேசிய தலைவர்கள் பலர் தமிழகத்துக்கு வர வாய்ப்பு உள்ளதால், அதற்குரிய ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக தமிழக தலைமை செயலர், மத்திய உள்துறை செயலருடன் தொலைபேசியில் பேசினார்.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக உள்துறை செயலருக்கு பேக்ஸ் அனுப்பி உள்ளதாக தகவல். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், மத்திய பாதுகாப்பு படையை அனுப்புவதாக உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.