அதிமுக ஒற்றைத்தலைமை பிரச்சனை ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்த சூழ்நிலையில், ஜூன் 23ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அன்றைய தினம் நிறைவேற்றவிருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்தனர். இதனால், அன்றைய பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம் உட்பட தனது ஆதரவாளர்களோடு வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு மீண்டும் ஜீலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு, அதன்படி பொதுக்குழு கூட்டம் கூட்டி எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்று அதிமுக தலைமை அலுவலகம் செல்ல திட்டமிட்டார். இதில் ஓபிஎஸ் ஆட்கள் யாரும் வராத வண்ணம் திட்டத்தை வகுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக சென்னையிலுள்ள 9 மாவட்டச் செயலாளர்களை தயார் செய்துள்ளார். இதில், வெங்கடேஸ் பாபு, பாலகங்கா, ராஜேஸ் ஆகியோரை பொதுக்குழு நடைபெற்ற பகுதியில் வரவேற்பு கொடுக்க நியமிக்கப்பட்டு அவர்கள் அந்த வரவேற்பை அளித்தனர். அதேபோல், தலைமை அலுவலகத்தில் ஜெயகுமார் தலைமையில் ஆதிராஜாராம், அசோக், கே.பி.கந்தன், சத்யா உள்ளிட்டோருக்கு எடப்பாடியை வரவேற்க அசைண்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை முறையாக செய்யாததன் காரணமாகவே ஓ.பி.எஸ் தலைமை அலுவலகத்தினுள் சென்றதாகவும், அலுவலகம் மூடப்பட்டு, இ.பி.எஸ் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல நேரிட்டதாகவும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.