அதிமுகவிற்கு இரட்டை இலையை ஒதுக்கி தீர்ப்பளித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இத்தீர்ப்பில் இரட்டை இலை ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கே சொந்தம் என கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் மூலமாக. இன்றைக்கு பலபேர் இந்த இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைத்தார்கள். சிலபேர் அண்மையில் கட்சிக்கு வந்து இந்த இயக்கத்தை பிடித்துவிடலாம் என கங்கனம் கட்டிக்கொண்டு எங்களுக்கு எவ்வளவு இடையூறு செய்யமுடியுமோ அவ்வளவு செய்தார்கள். அதெற்கலாம் இன்று நீதிமன்றத்தின் முன்பாக ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது, நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
இரட்டை இலை கிடைத்தன் மூலமாக அஇஅதிமுக வீறு நடைபோடும். இனி சட்ட ரீதியாக மேல்முறையீடு செல்ல வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். உச்சநீதிமன்றமே, உயர்நீதிமன்றத்தில் தீர்வு காணவேண்டும் என ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால் மேல்முறையீடுக்கு வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். ஏனென்றால் எங்கு சென்றாலும் இதே ஆதாரத்தைதான் அவர்களும் கொடுப்பார்கள், நாங்களும் கொடுப்போம். ஆகவே உண்மையான அஇஅதிமுக நாங்கள் இருக்கிற பக்கம்தான் என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், அதிமுகவிற்கு அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றது என எடுத்துவைத்ததன் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
திமுக சதித்திட்டத்தில் டிடிவி தினகரன் எங்களுக்கு இடையூறு கொடுக்கவேண்டுமென்று இந்த வழக்கைப் போட்டார். நீதிமன்றம் இவர்கள்தான் உண்மையான அதிமுக என எங்களுக்கு நல்ல தீர்ப்பைக் கொடுத்துள்ளது.