கட்சிக் கூட்டமானாலும், சட்டமன்றக் கூட்டமானாலும், எப்பிரச்சினையையும் தெளிவுடனும், துணிவுடனும் பேசி, செயல்பட்ட ஒப்பற்ற ஒரு செயல்வீரர் ஜெ.அன்பழகன் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்ட தூண்களில் ஒன்று சாய்ந்து விட்டது. தனது தந்தையார் (பழக்கடை ஜெயராமன் அவர்கள்) காலத்திலிருந்து தி.மு.க.விலேயே கொள்கை செடியாக வளர்ந்து, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், கட்சிக் கூட்டமானாலும், சட்டமன்றக் கூட்டமானாலும், எப்பிரச்சினையையும் தெளிவுடனும், துணிவுடனும் பேசி, செயல்பட்ட ஒப்பற்ற ஒரு செயல்வீரர் ஜெ.அன்பழகன் (வயது 62) ஆவார்.
கடந்த சில நாள்களுக்குமுன் அவரது உடல்நிலை மோசமடைந்து மீண்டும் குணமடைந்தார் என்ற செய்தி நமக்கெல்லாம் ஆறுதல் தந்தது. என்றாலும், தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல், இயற்கையின் கோணல் புத்தி அவரைப் பறித்துக் கொண்டது - இறுதிவரை தொண்டாற்றியவர் அவர்.
இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் இழப்பு அல்ல; சிறந்த ஜனநாயகவாதியாகக் கடமையாற்றிட்ட வீரனின் இழப்பு என்பதால், ஜனநாயகத்திற்கும், பொதுவாழ்விற்கும் ஈடற்ற இழப்பு.
சீரிய பண்பாளர்; எப்போதும் நம்மிடம் தனது தந்தையின் ‘மிசா’ காலத்து நண்பர் என்ற மரியாதை கலந்த அன்புடனும், பண்புடனும் பழகிய பான்மைமிக்க ஒரு சகோதரன்.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. தலைவருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
அவருக்கு நமது வீரவணக்கம்!
இவ்வாறு கூறியுள்ளார்.