சேலம், கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம். அதன் அடிப்படையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்றும் சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் தி.மு.க.வினர். எங்களை வாரிசு அரசியல் என்று சொல்லி மிரட்ட முடியாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, " இன்பநிதிக்கும் கொடி பிடிப்போம் என அமைச்சர் நேரு கூறியது உண்மைதான். நாம் மன்னர் பரம்பரை அதிகாரத்தை தான் ஒழித்திருக்கிறோமே தவிர கலைஞரின் பரம்பரை அதிகாரத்தை ஒழிக்கவில்லை. அமைச்சர் நேரு எப்போதும் உண்மையை பேசக் கூடியவர். உதயநிதியின் மகன் இன்பநிதிக்கும் குழந்தை பிறக்கும் போது அவருக்கும் திமுகவினர் கொடி பிடிப்பர்" என்று பேசினார்.