காலையிலிருந்து மாலை வரை அமைச்சர்களுக்கு இருக்கும் ஒரே வேலை உதயநிதியை புகழ்வதுதான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கோவை கோட்டைமேடு பகுதியில் நடந்த சம்பவத்தின் விசாரணை நல்லபடியாகச் செல்கிறது. அடுத்தடுத்து நிறைய பேரை கைது செய்துள்ளனர். நிறைய கைதுகள் நடக்கின்றது. என்.ஐ.ஏ அமைப்பினுடைய டி.ஜி சென்னையில் மீட்டிங் எல்லாம் போட்டு சதர்ன் இந்தியாவில் இருக்கக்கூடிய என்.ஐ.ஏ ஆபீசர்களும் இங்கே வந்து பேசி உள்ளார்கள். ஒரு பெரிய ஆலோசனை நடந்துள்ளது. அதனால் தேசியப் புலனாய்வு முகமை இந்த வழக்கைக் கையில் எடுத்த பிறகு எங்களுக்குத் திருப்திகரமாக இருக்கிறது. நிறைய பேரை கைது செய்துள்ளார்கள்.
என்.ஐ.ஏ அமைப்பினுடைய டி.ஜி தமிழ்நாடு வந்துள்ளார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல. இந்தியாவில் பல வழக்குகள் என்.ஐ.ஏவிடமிருக்கிறது. எத்தனை இடத்திற்கு பர்சனலாக டிஜி போய் பார்த்துள்ளார். தமிழகத்திற்கு மட்டும்தான் வந்துள்ளார். அதனால் திருப்திகரமான போக்கிலேயே இந்த வழக்குகள் சென்று கொண்டிருக்கிறது. உதயநிதிக்கு சிறந்த துறையாக எது இருக்கும் என்றால் இன்பர்மேஷன் பிராட்காஸ்டிங் துறை பொருத்தமாக இருக்கும்.
இளைஞர் மேம்பாடு விளையாட்டுத் துறையை விட அந்தத் துறையை எடுத்துக்கொண்டு எல்லாரும் எப்படி சினிமா எடுக்கிறார்கள். ஷூட்டிங் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது. எவ்வளவு படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்றெல்லாம் யோசித்துப் பண்ணினார் என்றால் தமிழ்நாட்டை உதயநிதி திரைத்துறையில் முதல் இடத்திற்குக் கொண்டு வந்து விடுவார். ஆனால் நெம்பர் ஒன் ப்ரொடூயுசராக உதயநிதிதான் இருப்பார். எவ்வளவு தயாரிப்பாளர் கண்ணீர் விடுகின்றனர். இதுபோன்ற துரதிஷ்டவசமான அரசியலை தமிழ்நாடு பார்த்ததே கிடையாது. காலையிலிருந்து மாலை வரை அமைச்சர்களுக்கு இருக்கும் ஒரே வேலை உதயநிதியை புகழ்வதுதான்'' என்றார்.