சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் கடந்த 09/10/2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ''எனக்கு வெற்றியை தந்ததால் எனக்கு ஏற்பட்ட புகழ் இவை அத்தனையும் சேர்ந்துதான் இன்றைக்கு நான் பொதுச் செயலாளராக உருவாகியிருக்கிறேன். இது மிகப்பெரிய பதவி. ஒன்றரை கோடி, இரண்டரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கழகத்தில் மூன்று பெரும் பதவிகள் உண்டு. ஒன்று தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர். பொருளாளராகவும் நான் இருந்திருக்கிறேன் பொதுச் செயலாளராகவும் இன்றைக்கு நான் உயர்ந்திருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் திமுக திமுக என்று இருக்கிற காரணத்தினால் என்னை போல் யார் உழைத்தாலும் அவர்களுக்கு கழகம் உரிய அங்கீகாரத்தை வழங்கும். எனவே எனக்கு தரப்பட்ட இந்த வாய்ப்பை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றதாக கருத வேண்டும்.
திமுக தோன்றியது 1949. அப்பொழுது பேரறிஞர் அண்ணா திமுகவில் பொதுச்செயலாளர். அவரையடுத்து நாவலர் பொதுச் செயலாளர். அதைத்தான் அண்ணா சொன்னார் 'தம்பி வா... தலைமை தாங்க வா... உன் ஆணைக்கு கட்டுப்பட்டு இருப்போம்...'' என்று அண்ணா நாவலரை பொதுச்செயலாளராக நியமித்து வரவேற்றார்கள். அதற்குப் பிறகு நம்முடைய பேராசிரியர் பொதுச் செயலாளராக இருந்தார். அந்த மூன்று பேருக்கு பிறகு நாலாவதாக நான்தான் அந்த ஸ்தானத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். இது எவ்வளவு பெரிய பொறுப்பு. சாதாரணமானது அல்ல. அண்ணாவும், நாவலரும், பேராசிரியரும் கட்டி முடித்த கோபுரங்கள். நான் அதன் அடியில் கொட்டிக் கிடக்கின்ற செங்கல். அந்த செங்கல்லுக்கு கூட மு.க.ஸ்டாலின் இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறார். எனவே இந்த இயக்கத்தில் யார் உண்மையாக பாடுபட்டாலும் பாடுபட்டதற்கேற்ப ஒரு பதவி வழங்கப்படும் என்பதை நமக்கு எல்லோருக்கும் தெரிவித்திருக்கிறார்கள்'' என்றார்.