
தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்களால் கிராமப்புற மாணவர்களும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு தகுதிபெற்று வருகிறார்கள் என்று நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் எறி பந்து போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி ரோஸ் மேரியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்த்தினார்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கினார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அனைத்து கிராமத்திலும் குறிப்பாக ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சிமெண்ட் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் கற்கள் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது நிலக்கோட்டை ஒன்றியம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்ற மாணவி இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நேபாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு எறிபந்து போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்றார். அப்போது அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி... “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டங்களால் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் அளவிற்கு தயாராகி வருகிறார்கள்” என்றார். மேலும், கிராமப்புறத்தில் உள்ள மாணவி ரோஸ்மேரி பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு சிங்கப்பூரில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.