2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுக்க அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிவசேனா உத்தவ் பால் தாக்கரே அணித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது, யவத்மால் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. அப்போதே என்னுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்திருந்தால் மற்ற கட்சிகளுக்கு சிவப்பு கம்பளத்தை விரிக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு ஏற்பட்டிருக்காது.
பா.ஜ.க மற்றும் சிவசேனா முதல்வர்கள் தங்களது பதவிக் காலத்தையும் நிறைவு செய்திருப்பார்கள். மற்ற கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை. கூட்டணியில் புதிதாகச் சேர்ந்தவர்களை அந்த கட்சி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பார்க்கப் போகிறேன்” என்று கூறினார்.