இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகம், மறைந்த தலைவர் பாலதண்டாயுதம் நினைவாக 'பாலன்' இல்லம் என்ற பெயரில் சென்னை தி.நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ஏழு மாடிகள் கொண்ட இந்தப் புதிய கட்டிடம் திறப்பு விழா செய்யப்பட்டது.
தமிழகம் முழுக்க உள்ள கம்யூனிஸ்ட் தொண்டர்கள், நிர்வாகிகள், உழைப்பாளிகள், பொதுமக்கள் கொடுத்த நன்கொடை, இவை இல்லாமல் வங்கிக் கடன் பெற்று பல கோடி ரூபாயில் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் இருக்கும்போது இக்கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடமான பாலன் இல்லம் பற்றி சிலர் வலைத்தளங்களில் அவதூறு பரப்பியுள்ளார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 22ஆம் தேதி அனைத்து ஊர்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி உட்பட பல கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் பற்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், உழைப்பாளிகளின் வியர்வையில் உருவானது 'பாலன்' இல்லம்" எனக் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் பவானியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தலைமை தாங்கினார், சென்னை, கோவை, மதுரை, தஞ்சை, நெல்லை உட்பட மாநிலம் முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், வி.சி.க. எனக் கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.