Skip to main content

தமிழகத்தில் சாதிக் கலவரங்களை உண்டாக்க பி.ஜே.பி. தலைவர் முருகன் முயற்சி செய்கிறார்! -கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

E.R.Eswaran

 

தமிழகத்தில் சாதி கலவரங்களை உண்டாக்க பி.ஜே.பி. தமிழ் மாநில தலைவர் முருகன் முயற்சி செய்கிறார். சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகும் என்று எச்சரிக்கிறோம் எனக் கூறியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பாதிப்பால் தமிழகம் தடுமாறி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாதி அரசியலைக் கையில் எடுத்திருக்கின்ற பி.ஜே.பி. தமிழ் மாநில தலைவர் முருகன் அவர்களைக் கண்டிக்கிறோம். 

 

குறிப்பிட்ட சில சமூக பிரிவுகளை ஒன்றிணைத்து பொதுவான ஒரு பெயரை கொடுப்பதற்கு பி.ஜே.பி. தமிழக தலைவர் முயற்சிக்கிறார் என்பது அவருடைய பத்திரிகை செய்தியில் இருந்து தெரிகிறது. இந்தப் பிரச்சனை சில ஆண்டுகளாக தமிழகத்தில் பேசப்பட்டு வருவதும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதும் எல்லோரும் அறிந்ததே. 


சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்காமல் ஒரு சமூகத்திற்கு புதுப்பெயர் வைக்க மத்தியிலே ஆள்கின்ற கட்சியினுடைய தமிழக தலைவர் முயற்சிப்பது பல்வேறு சாதி கலவரங்களைத் தமிழகத்தில் உருவாக்கும். அதன் மூலம் அரசியல் லாபத்தை அடைய பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தால் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகும். குறிப்பிடப்படுகின்ற சமூக பிரிவுகள் இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றப்படுகின்ற நிலைமையும் ஏற்படும்.  

 

அந்தச் சமூகங்களைச் சார்ந்த ஒரு சிலர் இந்தக் கோரிக்கை வைக்கிறார்கள் என்பதற்காக அந்தச் சமூகத்தைச் சார்ந்த அனைவருடைய கருத்துகளையும் கேட்காமல் வாக்கு வங்கிக்காக இதைச் செய்தால் அவர்களுக்குள்ளேயே கலவரங்கள் வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உண்மையான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் களம் இறங்கியிருப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். 

 

'அரசனை நம்பி புருஷனை விட்ட கதை'யாகப் போகும். தமிழகத்தில் சிறிதளவு இருக்கின்ற வாக்கு வங்கியும் பா.ஜ.க.-வில் இருந்து வெளியேறுவதற்கு இந்தச் செயல்பாடுகள் வழிவகுக்கும். நாட்டை ஆள்கின்ற ஒரு தேசிய கட்சியினுடைய தலைவர் தமிழ் மண்ணில் சாதி கலவரங்கள் வரக்கூடாது என்று விரும்பினால் தன்னுடைய கருத்துகளை திரும்பப்பெற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்