விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மஸ்தானின் பகுதியில் உள்ள மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று சேர்மன் பதவியை பெற இருந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், பழனி, தயாளன், ஆகிய மூன்று பேர் சேர்மன் பதவிக்கு முட்டி மோதினார்கள். அமைச்சர் மஸ்தான், தயாளனை சேர்மனாக பதவியை ஏற்குமாறு அறிவித்தார்.
ஆனால், கண்ணன் அதை ஏற்கவில்லை. ‘கட்சியின் மூத்த நிர்வாகி நான்; எனக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளது. எனவே எனக்குத்தான் சேர்மன் பதவியை அளிக்க வேண்டும்’ என்று கூறியதோடு போட்டியிலும் இறங்கினார். சில ஒன்றியக் குழு உறுப்பினர்களை அழைத்து சென்று தனது கஸ்டடியில் வைத்திருந்தார் கண்ணன்.
கடந்த 22ஆம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை போட்டியின் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அதனை அமைச்சர் மஸ்தான் மறுத்துள்ளார். இதனால் தயாளன் ஆதரவாளர்களுக்கும் கண்ணன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே சமயம் சேர்மன் தேர்தலை அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.
மாவட்டச் செயலாளர் அறிவித்த சேர்மன் வேட்பாளரை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய காரணத்தினால் மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், மரக்காணம் நகர செயலாளர் பாரத் குமார் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி கட்சித் தலைமை அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், நேற்று மாலை மரக்காணத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் சேர்மனாகவும், மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி துணை சேர்மனாகவும் தேர்வு செய்ய உள்ளதாக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மஸ்தான் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.