கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.இதற்கு வேலூர் தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததாக கூறப்பட்டது.இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் பணம் கைப்பற்றியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவியது.இந்த நிலையில் வருமானவரித்துறை சம்மந்தமாக முதலமைச்சர் பழனிச்சாமி சூலூர் பிரச்சாரத்தில் கூறியது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என்றும் தங்களுடைய வீடு, கல்லூரியில் சோதனை நடத்தி வருமான வரித்துறை கொண்டு சென்றது 10 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே என்றும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். மேலும்,13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் இடம் தங்களுடையது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், சோதனையின்போது எங்குமே 12 கிலோ தங்கம் கைப்பற்றப்படாத நிலையில், முதலமைச்சர் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். அனைத்தும் அறிந்துக் கொள்ளக்கூடிய இடத்தில் அமர்ந்துள்ள முதலமைச்சர், ஏதும் தெரியாத சராசரி மனிதனை போல பேசியிருப்பது கேலிக்கூத்தாக இருப்பதாகவும் திமுக பொருளாளர் கூறியுள்ளார்.மேலும் முதலமைச்சர் நிரூபித்தால் தமது பதவியை ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ள துரைமுருகன், இல்லையெனில் முதலமைச்சர் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.பின்பு தேர்தல் முடிவு வந்தவுடன் மக்களே அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தனது வழக்கமான கிண்டலில் துறைமுருகன் கூறியுள்ளார்.