திமுக தலைமைச் செயற்குழுவில் பங்கேற்றவர்கள் என்னவிதமான நிர்வாக மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அறிவாலய மேலிடத்தில் முதன்மைச் செயலாளர் பதவியில் டி.ஆர்.பாலுவுடன் கே.என்.நேருவையும் நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக முதன்மைச் செயலாளராக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “திமுக முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவராகவும் பொறுப்பு வகித்துவருவதால், அவருக்குப் பதிலாக திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. கட்சித்தலைமையால் நியமிக்கப்படுகிறார்" என்று தெரிவித்தார்.
இதன் பின்னணி பற்றி விசாரித்த போது, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்ற அனைத்து 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பாஜக அரசு வழங்கும் என்று சொல்லப்பட்டது. பாஜகவின் கடந்த ஆட்சியின் போது அ.தி.மு.க-வுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. தம்பிதுரை துணை சபாநாயகராக பதவி வகித்தார். இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் துணை சபாநாயகர் பதவிக்கு எந்த கட்சியினரையும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக 38 எம்.பி-க்களை பெற்றுள்ள தி.மு.க-வுக்கு அந்த பதவியை தர பா.ஜ.க தயாராக உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாஜக துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் அந்த பதவியை நாடாளுமன்ற திமுக குழுத்தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவிற்கு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேருவை நியமித்து இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும் பாஜக கொடுக்கும் துணை சபாநாயகர் பதவியை திமுக ஏற்றுக்கொண்டால் பாஜகவிற்கு தி.மு.க ஆதரவு என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த பதவியை ஏற்கலாமா, வேண்டாமா என்று ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.