கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் இன்று மாலை பொங்கல் விழா நடைபெற்றது. கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் எதிரேயும் வீனஸ் பார்க் எதிரேயும் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “என் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு வரும் பொழுது எத்தனை மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது என்பதை ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளேன்.
அதற்காக கொளத்தூர் தொகுதி மட்டும் தான் எனக்கு முக்கியம் என்று இல்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் முதலமைச்சர் என்கிற முறையில் எனக்கு முக்கியம் தான். அதை நான் மறக்க மாட்டேன். அதற்காகத்தான் உங்கள் தொகுதிகளில் முதலமைச்சர் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து 234 தொகுதிகளுக்கும் அந்த திட்டத்தை நான் விரிவுபடுத்தி அந்த தொகுதியில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளை மையமாக வைத்து அதை முடிக்க வேண்டும்; அதை செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு எல்லாம் நான் சுற்றுப்பயணத்தை நடத்தினேன். அத்தொகுதிகளில் மக்கள் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு மக்களிடம் அது குறித்த மனுக்களை வாங்கினோம். அந்த மனுக்களை எல்லாம் நாங்கள் சேர்த்து வைத்திருந்தோம். ஆட்சிக்கு வந்தோம். பெட்டி திறக்கப்பட்டது. எதையெல்லாம் வேகமாக முடிக்க முடியுமா, அதையெல்லாம் முடித்துத் தந்துள்ளோம். அதேபோல்தான் இந்த கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை பல பிரச்சனைகளை ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே செய்து முடித்துள்ளோம்” எனக் கூறினார்.