நில அபகரிப்பு, கட்டபஞ்சாயத்து, வீடு புகுந்து தாக்கும் ரவுடிகள் என அதிரவைக்கின்றது கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த அந்த சம்பவம் ஆளும் கட்சி அமைச்சரின் ஆதரவாளர் உத்தரவின் பேரில் நடந்ததாக கூறப்படுவதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தில் பாரம்பரியமாக வசித்து வரும் சுமதி-சந்திரசேகர் தம்பதியினருக்கு சொந்தமாக 14 சென்ட் நிலம் மேட்டுப்பாளையம், கல்லாறு - ஊட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலத்தில் 3 சென்ட் மட்டும் வாடகைக்கு விட அவர்கள் முடிவெடுத்தனர். சுக்கூர்பாய் என்பவர் சிறிய கடை போட வாடைகைக்கு கேட்டு ஒப்பந்தம் போட்டவர், 11 மாதமாக வாடகை கொடுக்காமல் பேசிய அட்வான்ஸ் தொகையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஒரு வருடமாக நிலத்தில் எதுவும் செய்யாமல், வாடகையும் கொடுக்காமல் திடீரென இரண்டு மாடி அளவுக்கு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர். வாடகையும், அட்வான்ஸ் தொகையும் தராமல் ஏன் திடீரென இவ்வளவு பெரிய கட்டுமான பனிகளை செய்கின்றீர்கள்? எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இப்படி பணிகளை செய்தால் நாளை எங்களுக்கு பிரச்சனை வரும் என்று நிலத்தின் சொந்தக்காரர்களான சுமதி - சந்திரசேகர் ஆகியோர் கேட்க, சரியாக பதில் கூறாமல் சுக்கூர்பாய் மறுத்து வந்துள்ளராம்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அம்மா பேரவை நகர அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க அமைப்பாளர் மருதுபாண்டி, சுக்கூர்பாயுடன் வந்து இனிமேல் தன்னிடம்தான் நீங்கள் பேச வேண்டும் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர். மருதுபாண்டி மேட்டுப்பாளையம் அம்மா பேரவையின் தலைவர் நாசரின் ஆதரவாளர்.
இந்நிலையில் மீண்டும் சில நாட்களில் வந்த மருதுபாண்டி, ''ஒன்று நிலத்தை கொடுங்கள், இல்லையென்றால் ரூபாய் 7 இலட்சம் கொடுங்கள்'' என மிரட்டியதாகவும், ''பணத்தை கொடுக்க மறுத்து நாங்கள் சட்டரீதியாக நடப்போம்'' என சுமதி சந்திரசேகர் தம்பதியினர் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 07.10.2020 அன்று இரவு 7.30 மணியளவில் ஊட்டி சாலையில் உள்ள மசாலா குடோனில் சுமதி-சந்திரசேகர் மற்றும் அவர்களது மகன் லோகேஷ் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுக்கூர்பாய், மருதுபாண்டி உள்ளிட்ட 20 பேர் குடோனுக்கு நுழைந்து தந்தை சந்திரசேகர் (62), மகன் லோகேஷ் (27) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த எதிர்கடைக்காரர் பசூரிதினையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும் லோகேஷ் கழுத்தில் போட்டிருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியையும் அறுத்து சென்றுள்ளனர். இதில் சந்திரசேகர் பலத்த காயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேட்டுப்பாளையம் கே.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடித்து உதைத்து விட்டு, மீண்டும் இரண்டு நாட்களில் வருவோம், உன் மகனை பத்திரமாக பாத்துக்க என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் முழுவதுமாக மேட்டுப்பாளையம் காவல் நிலைத்தியத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் துனையோடு நடந்துள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
உச்சகட்டமாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்த இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், உங்கள் மீது அவர்களும் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே இருவர் மீதும் புகார் எப்.ஐ.ஆர். போடுவேன் என கூறினாராம்.
மேட்டுப்பாளையம் அம்மா பேரவையின் தலைவர் நாசர் என்றாலே ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றனர் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள்.
மேலும் இந்த சொத்து விவகாரத்தில் அமைச்சர் நேரடியாக காவல்துறையினரை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தங்களை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுதொடர்பாக அம்மா பேரவை செயலாளர் நாசரிடம் கேட்டபோது, ''எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என பதிலளித்தார்.
மேலும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவனை தொடர்புகொண்டபோது, ''எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசினால்தான் பதில் கிடைக்கும்'' என கூறினார்.
மேட்டுப்பாளையம் நில அபகரிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சுமதி-சந்திரசேகர் தம்பதியின் வழக்கறிஞராக மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞருமான ப.மோகன் கூறும்போது, ''கோவை மாவட்டத்தில் பொய் வழக்கு தொடுக்க வைக்கும் நிகழ்வு நடக்கிறது. அமைச்சருக்கோ அல்லது அவர்களின் ஆட்களுக்கோ எதிராக செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு போட்டு மிரட்டுவது தொடர்கிறது. இந்த வழக்கிலும் இதுவே நடக்கிறது.
20 பேர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளும் தெளிவாக இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் அதிமுகவினர் என்பதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வேன் என பாதிக்கப்பட்டவர்களை இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளது எந்த அளவிற்கு கோவை மாவட்டத்தில் அரசுதுறைகள் சீரழிந்துள்ளது என்பதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வைக்க உரிய சட்ட போராட்டத்தை நடத்துவோம்'' என்று கூறினார்.
சமீபகாலமாக காவல்துறையினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையை சேர்ந்தவர்கள் இதுபோன்ற சொத்து அபகரிப்பு, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுடன் தொடர்பு வைத்து அவர்களுக்கு சாதகமாக நடந்து வருவது தமிழக காவல்துறையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது அந்தத் துறையைச் சேர்ந்த நேர்மையானவர்களின் கவலையாக உள்ளது.
-சிவா