கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,845- லிருந்து 1,45,380 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021- லிருந்து 4,167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721- லிருந்து 60,491 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 80,722 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்து இருக்கலாம். மதுக்கடைகளைத் திறந்ததைத் தவிர, மற்றவைகளில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தால், இதை விடச் சிறப்பாக என்ன செய்து விடப் போகிறார்கள்? அனைத்து மாவட்டங்களிலும், மக்களுக்குத் தேவையான உதவிகளை தே.மு.தி.க. செய்து வருகிறது என கூறினார். பிரேமலதாவின் இந்தக் கருத்துக்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.