சென்னை கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் அயனாவரம் வருவாய் வட்டத்திலிருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர் உள்ளிட்ட 3 கிராமங்கள் அடங்கியுள்ளன. அதோடு 3 லட்சத்து 78 ஆயிரத்து 168 பொதுமக்கள் வசிக்கும் கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூகப் பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் வருவாய் வட்டத்திற்குப் புதிதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 36 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் 8 மாதங்களுக்கான தொடர் செலவினங்களுக்கு ரூ. 1.98 லட்சமும், தொடரா செலவினங்களுக்கு ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து இன்று (24.09.2024) ஆய்வு செய்து பார்வையிட்டார். அந்த வகையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் புதிய சமுதாய நலக்கூடக் கட்டுமான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சுமார் ரூ. 4.23 கோடியில் கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி, புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் புதிதாக அமையவுள்ள வட்டாட்சியர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதற்கிடையே அமைச்சரவை மாற்றம் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது. மாற்றம் இருக்கும்” எனப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட தெளிவான விளக்கமே வெள்ளை அறிக்கைதான்” எனப் பதிலளித்தார்.