உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் விமானத்தை மறிக்கும் போராட்டமும் நடைபெறும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்தார்.
இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பங்கேற்கும் என்று அதன் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று காலை திருச்சி விமான நிலையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் குவிந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அய்யாக்கண்ணு தலைமையில் விமான நிலைய பழைய முனையம் அருகே மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் விவசாயிகள் திடீரென விமான நிலையம் எதிரே சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த சட்டம் ஒழுங்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சக்திகணேஷ் நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்க போய் போராட்டம் நடத்துங்க என்றார். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீஸ் அதிகாரிக்கும், அய்யாக்கண்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்திற்கு கட்சி தொண்டர்கள் புடைசூழ அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்தார். பின்னர் திறந்த வேனில் டி.டி.வி.தினகரன், அய்யாக்கண்ணு ஆகியோர் புறப்பட்டனர்.
புதுக்கோட்டை சாலையே தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கானோர் டெல்டா முழுவதும் திரண்டு வந்ததால். திரும்பிய திசையெல்லாம் விவசாயிகள் மற்றும் கட்சியினர் தலைகளாகவே காட்சி அளித்தன. தேசிய நெடுஞ்சாலையே கிட்டதட்ட 2 மணிநேரம் பாதிக்கப்பட்டு நின்றது. திருச்சியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு அவர்கள் தடையை மீறி விமான நிலையம் முன்பு குவிந்தனர்.
அவர் விவசாயிகளுடன் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். அப்போது அய்யாக்கண்ணு பேசுகையில், தமிழக விவசாயிகள் நலனில் பிரதமர் மோடி பாரபட்சமாக செயல்படுகிறார். நாங்கள் ஆதரவற்றவர்களாய் இருந்த போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவுக்கரம் நீட்டினார். விவசாயிகளுக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் நடத்தினார். தற்போது இன்று நடந்த போராட்டத்திலும் பங்கேற்று உள்ளார். அவரை வணங்குவதற்கு விவசாயிகள் கடமைப்பட்டு இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும் என்றும் தமிழ்நாட்டை சோமாலியா போன்று ஆக்கிவீடாதீர்கள் என்று அறைகூவிடுத்தார்.
அடுத்து பேசிய டி.டி.வி.தினகரன் - தமிழக விவசாயிகள் தமிழக மக்களின் வாழ்வாதாரம், ஜீவாதார பிரச்சனைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல் குரல் கொடுக்கும். அதன் அடிப்படையில் இன்று விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் பங்கேற்று உள்ளோம். விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவி கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என எந்த திட்டமாக இருந்தாலும் தமிழகத்தில் அமைக்கவிட மாட்டோம். இந்த போராட்டம் தேர்தலுக்காக நடத்துகிற போராட்டம் கிடையாது. ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான். திருச்சி பெல் தொழிற்சாலைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதையும் விடமாட்டோம். ஜெயலலிதாவின் ஆட்சி அமைத்து தமிழக மக்கள் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றார். பின்னர் விவசாயிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ அய்யாக்கண்ணு மற்றும் டி.டி.வி.தினகரன், தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடி ரெங்கநாதன் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தினகரன், அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் சங்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தினகரன் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். உடனே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அந்த வேனை மறித்தனர். தினகரனை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பினர். மேலும் அந்த போலீஸ் வேன் மீதும் ஏறியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. ஆனாலும் போலீசார் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் வேனை எடுத்து சென்றனர். கைதானவர்கள் திருச்சியில் உள்ள 3 விமானநிலையம் அருகே உள்ள முத்தையா மண்டபம் உள்ளிட்ட பெரிய திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். வழக்கமா மாலை வரை வைத்திருந்து வெளியே தான் விடுவார்கள் ஆனால் இன்று மதியம் 3.30 மணிக்கே ரீலிஸ் செய்தனர். போலிஸ் கணக்கு படி 1540 மட்டும் கலந்து கொண்டதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள்.