
கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எல்லோருமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்போதும் கூட அதே நிலையில் தான் இருக்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.பி.ஐ. வேட்பாளர் மாரிமுத்து இன்றுவரை ஒலை வீட்டிலேயே வசிக்கிறார். தன் தொகுதி மக்களின் தேவைகளை கோரிக்கைகளாக எழுதி மனுவோடு சென்று அமைச்சர்கள் ஏ.வ.வேலு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அந்தப் படங்கள் தான் இப்போது பேசு பொருளாகவும் ஆகியுள்ளது. அதாவது எம்.எல்.ஏ. மாரிமுத்து தனது தொகுதி தேவைகள் குறித்து எழுதிய மனுவை கொடுத்த போது நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர்கள் சொன்னதில் மகிழ்ச்சியோடு வெளியே வந்திருக்கிறார். ஆனால், அந்த மனுவை வாங்கிய அமைச்சர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு எம்.எல்.ஏ.வை நிற்க வைத்து ஒற்றைக் கையில் மனுவை வாங்கும் அந்த காட்சி தான் தொகுதி மக்களிடம் பேசு பொருளாகி உள்ளது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரை அமர வைத்து மனு வாங்கி இருக்கலாம். அல்லது இருக்கை இல்லை என்றால் எழுந்து நின்று மனுவை வாங்கி இருக்கலாம். இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்ததாக இருக்கலாம். ஆனால் தொகுதி மக்களால் அப்படி பார்க்க முடியவில்லை. அலட்சியம் காட்டி இருப்பது போல உள்ளதாக தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர்களே விளக்கினால் தான் தொகுதி மக்கள் நிம்மதியடைவார்கள்.

அதே நேரத்தில் எங்கள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, தனது ஒரு மாத சம்பளத்தை கரோனா நிவாரண நிதிக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் போது முதலமைச்சர் எழுந்து நின்று வாங்கியது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்கிறார்கள் தொகுதி மக்கள்.